
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பல இளம் இலங்கை வீரர்கள் அசத்தியுள்ள நிலையில் இலங்கைக் கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு சிக்கலான நிலைமை தோன்றியுள்ளது.
அதாவது, எதிர்வரும் அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான தொடரில் யாரையெல்லாம் சேர்த்துக்கொள்வது என்பதுவே அவர்களின் தலையிடியாக உள்ளது.
காரணம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் முன்னணி வீரர்கள் 10 பேர் விளையாடியிருக்கவில்லை. அவர்கள் மீள அணிக்குத் திரும்பும் பட்சத்தில், இளம் வீரர்கள் கழற்றிவிடப்பட வேண்டும்.
ஆனால், அணிக்காக சிறந்த பங்களிப்பை பொருத்தமான நேரத்தில் வழங்கிய அவர்களை கழற்றிவிடும் எண்ணம் இலங்கை தெரிவுக்குழுவுக்கு இல்லை.
முக்கியமாக முதல் போட்டியில் அரைச்சதம் குவித்த தனுஷ்க குணதிலக்க, இரண்டாவது போட்டியில் அரைச்சதம் குவித்த பானுக்க ராஜபக்ஷ, மூன்றாவது போட்டியில் அரைச்சதம் குவித்த ஓஷாட பெர்ணான்டோ மற்றும் மூன்றாவது போட்டியில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வனிந்து ஹசரங்க ஆகியோர் தவிர்க்க முடியாதவர்கள்.
இவ்வாறான நிலையில், இவர்கள் அணியில் இடம்பெறும் போது, திசார பெரேரா, தனஞ்சய டீ சில்வா, தினேஸ் சண்டிமல் ஆகியோரின் நிலை கவலைக்கிடமாகும்.
இதுபோக, இலங்கை கிரிக்கெட் தலைமைத் தெரிவாளர் அசந்த டி மெல் அண்மையில் தெரிவித்த கருத்தொன்றில், ஒஷாட பெர்ணான்டோவின் துடுப்பாட்டம் மஹேலாவை ஞாபகப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
‘முன்பு யாரை தெரிவு செய்வது என்ற குழப்பம் நிலவியது. இப்பொழுது யாரை கழற்றிவிடுவது என்ற குழப்பம் நிலவுகிறது. இது ஒரு நல்ல தலையிடி’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply