
வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு இலங்கையில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டாரிகளும் தமது ஆதரவினை வழங்குவர் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் க.அனிதன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

தமக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டபோதும் தமக்கான சாதகமான உறுதிமொழிகளை வழங்குபவரை ஆதரிப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர், “இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்குவந்தாலும் வேலையற்ற பட்டதாரிகளை புறக்கணிக்கும் வகையிலான செயற்பாடுகளையே தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அதன் காரணமாகவே நாங்கள் தேர்தலை புறக்கணிக்கும் தீர்மானத்தினை எடுத்தோம்.
இலங்கையில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் இரண்டு இலட்சத்து 30ஆயிரம் வாக்குகள் இருக்கின்றது. அனைத்து வாக்குகளையும் இந்த தேர்தலில் புறக்கணிப்பிற்காக பயன்படுத்துவோம்.
படித்த பட்டதாரிகள் வேலைக்காக போராடிக் கொண்டிருக்கும்போது சாதாரண தரம், உயர்தரம் படித்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் சில அமைச்சர்களும் முட்டுக்கட்டையாக இருப்பதான தகவல்களும் எங்களுக்கு உறுதியாக கிடைத்துள்ளது. நியமனங்களுக்கு பணத்தினைப் பெற்றுக்கொண்டு எங்களை புறந்தள்ளும் செயற்பாடுகளை சிலர் செய்துவருகின்றனர். இவ்வாறானவர்கள் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரும்போது இதன் எதிர்வினைகளை அனுபவிக்கும் நிலையேற்படும்” என்று தெரிவித்தார்.
Leave a Reply