சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் தப்பியோட்டம்

வடக்கு சிரியாவில் உள்ள குர்திஸ் படையினரை இலக்கு வைத்து துருக்கி இராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள நலன்புரி முகாம் ஒன்றிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டும் முகமாக அமெரிக்கா முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கிய குர்திஸ் படைகள் மீது துருக்கி ஐந்து நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றது.

சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை மீளப்பெறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த நிலையிலேயே சிரியா மீது துருக்கி தாக்குதலைத் தொடுத்துள்ளது.

அமெரிக்க மற்றும் குர்திஸ் படையினரின் (சிரிய ஜனநாயகப்படை) நடவடிக்கைகளை அடுத்து கைது செய்யப்பட்ட பல ஐ.எஸ். பயங்கரவாதிகள் வடக்கு சிரியாவிலேயே சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாது பயங்கரவாதிகளின் உறவினர்களும் முகாம்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

துருக்கி மோதலை ஆரம்பித்து வடகிழக்கு சிரியாவின் மத்திய நகரொன்றை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், முகாமில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் உறவினர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைப்பிடிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால், அவர்களை நீண்டகாலம் பராமரிக்கப் போவதில்லை என குர்திஸ் படைகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் எனச்சந்தேகிக்கப்படும் 12 ஆயிரம் பேர் ஏழு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குர்திஸ் படைகள் தெரிவித்துள்ளன. அவர்களில் நான்காயிரம் பேர் வெளிநாட்டினர் ஆவர்.

இதேவேளை, துருக்கி – சிரிய மோதலினால் இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் பொதுமக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும், இடப்பெயர்வு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் ஐ.நா. அறிவித்துள்ளது.

மோதல் இடம்பெறும் பகுதியில் இரு நாடுகளையும் சேர்ந்த 50 வரையான அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

‘பாதுகாப்பு வலயம்’ ஒன்றை குறித்த பிராந்தியத்தில் ஏற்படுத்தி இடம்பெயர்ந்துள்ள சிரிய அகதிகளை அங்கே குடியமர்த்தப் போவதாக துருக்கி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுடன், யாருடைய அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து தங்கள் போர் நடவடிக்கையை கைவிடப்போவதில்லை எனவும் துருக்கி குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *