ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கவுள்ளனர்.
வருகின்ற வியாழக்கிழமை விமான நிலைய திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் முதலாக சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து அலையன்ஸ் எயார் விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகிறது.
விமானத்துறையைச் சார்ந்தவர் இந்த விமானத்தில் அழைக்கப்பட்ட விருந்தினர்களாக இந்தியாவில் இருந்து வருகை தரவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகை தரும் விருந்தினர்களை யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து வரவேற்கவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டதும் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து வாரத்தில் மூன்று சேவைகளை நடத்தவுள்ளதாக அலையன்ஸ் எயர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, வாரத்தில் 7 விமான சேவை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதனை 12 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு ஆளுநர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply