பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இன்று (25) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்தார். இன்று காலையில் தமிழ்பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததை போலவே, விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினர்- இனப்பிரச்சனை- தொடர்பான எந்த விவகாரமும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
கொழும்பு தாமரை தடாக அரங்கில் இந்த நிகழ்வு நடந்தது.
விஞ்ஞாபன வெளியீட்டில் உரையாற்றிய கோட்டாபய, வெளிநாடுகளை இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட அனுமதிக்க மாட்டேன் என்றார்.
தன்னை ஜனாதிபதியாக்கினால், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முக்கியத்துவம் கொடுப்பார் என்று வலியுறுத்தினார்.
“பயங்கரவாதிகள், பாதாள உலக குழுக்கள், குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான அரசு இயந்திரத்தை நாங்கள் பலப்படுத்துவோம்” என்றார்.
ஊழலை ஒழிப்பதற்கான ஒரு பொதுவான சட்டத்தை அமல்படுத்துவதாகவும், நீதித்துறையில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகவும், நீதி செயல்முறையை விரைவுபடுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்
பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,
தெற்காசியாவில் வணிக மையமாக இலங்கை மாற்றப்படும். இளைஞர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதன் மூலம் அறிவு சார்ந்த பொருளாதாரம் உருவாக்கப்படும்.
உள்ளூர் மற்றும் சர்வதேச வேலை சந்தையில் இளைஞர்களுக்கான வாய்ப்பை எளிதாக்கும் விதமாக அவர்கள் உருவாக்கப்படுவார்கள். இந்த இலக்கை அடைய கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீட்டை தனது அரசாங்கம் அதிகரிக்கும்.
மீன்வள மற்றும் விவசாயத் துறைகளில் இளைஞர்களின் ஆர்வத்தை தூண்ட அந்த துறைகள் மேம்படுத்தப்படும்.
புதிய எளிமைப்படுத்தப்பட்ட வரிக் கொள்கையை அறிமுகப்படுத்தப்படும்.
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டண வரிகள் இரத்து செய்யப்படும்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வட்) எட்டு சதவீதம் வரை குறைத்தல், மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்படும் வரிகளை நீக்குதல்.
வரி அறவீட்டில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க சுங்க மற்றும் கலால் துறைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தல்.

சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம், போக்குவரத்து, சுகாதாரம், கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
நாட்டிற்கு ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டும் இலக்குடன் சுற்றுலாத் துறை அபிவிருத்தி செய்தல்.
விவசாயிகளுக்கு இலவச உரங்களை வழங்குவதன் மூலம், விளைபொருட்களை மறு ஏற்றுமதி செய்வதை தடை செய்வதோடு, நாட்டில் கரிம விவசாயத்தை ஊக்குவித்தல்.
தாய்மார்களுக்கு நீண்ட வேலை நேரத்தை எளிதாக்குவது, கழிவு மேலாண்மை சிக்கல்களை அறிவியல் பூர்வமாக தீர்ப்பது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது உள்ளிட்ட விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
கோட்டாபய உரையாற்றிய போதோ, விஞ்ஞாபனத்தலோ தமிழர் விவகாரம் பற்றி பேசப்படவில்லை.
Leave a Reply