
ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் இன்று வியாழக்கிழமை அதிகாலை கிழக்கு லண்டன் முழுவதும் 16 வீடுகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு லண்டனின் ரெட்பிரிட்ஜ், ஹேவரிங், பார்கிங் மற்றும் டகெனம், நியூஹாம், பிரென்ட்வூட் மற்றும் டவர் ஹம்லெற்ஸ் ஆகிய இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் சர்வதேச மனிதக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுகின்றது.
சந்தேக நபர்களில் 14 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் அடங்குகின்றனர். அவர்கள் அனைவரும் மத்திய லண்டனில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் 17 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
நவீன அடிமைத்தனம், பெண்களை விபச்சாரத்துக்கு கட்டாயப்படுத்துதல், போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் துப்பாக்கி வைத்திருந்தமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரொமேனியப் பொலிஸாருடன் இணைந்த நடவடிக்கையின் அடிப்படையில் கிழக்கு லண்டனில் 16 முகவரிகளில் இந்தத் திடீர்ச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை ரொமேனியாவில் சமநேரத்தில் நான்கு வீடுகளில் மேற்கொண்ட சோதனையில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அண்மையில் லண்டனில் 29 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் என்றும் அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெற்றோ பொலிற்றன் பொலிஸின் துப்பறியும் தலைமை இன்ஸ்பெக்ரர் ரிச்சர்ட் மக்டோனா கூறுகையில்; நவீன அடிமைத்தனத்தின் தீவிரத்தன்மையையும் அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பேரழிவையும் விவரித்தார்.
தாம் மேற்கொண்ட நடவடிக்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பை அகற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை வழங்கும் நோக்கத்தைக் கொண்டது என்று கூறினார்.
இந்தக் கைது நடவடிக்கை குறித்து இங்கிலாந்தில் உள்ள ரொமேனியப் பொலிஸாரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில்; பிரித்தானியப் பொலிஸாருடன் இணைந்து உழைக்கும் ரொமேனியப் பொலிஸ் அதிகாரிகள் ஒரு பெரிய சாதனையைச் செய்துள்ளனர்.
மேலும் மெற்றோ பொலிற்றன் பொலிஸாருடன் இணைந்து அனைத்து வகையான குற்றங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு ரொமேனியப் பொலிஸார் உறுதிபூண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply