
யாழ். சுழிபுரம் மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளது என்பது, அரச இரசாயனப் பகுப்பாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.இது தொடர்பில் தெரியவருவதாவது;
யாழ். சுழிபுரம் காட்டுபுலம் பகுதியில் சிவனேஸ்வரன் றெஜினா என்ற 6 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் மாலை அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மூவரும் கடந்த 17 மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.இந்த நிலையில், சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கே உள்ளது.
அதனால், சிறுமி படுகொலை வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடையாத நிலையில், சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தது.மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலையுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளது என்பது அரச இரசாயனப் பகுப்பாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், உத்தியோகபூர்வ பகுப்பாய்வு அறிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.அந்த அறிக்கை 2 வாரங்களில் நீதிமன்றுக்கு முன்வைக்கப்படும்.அதனால், இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் படி மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.எனவே, சந்தேகநபர்களின் விளக்கமறியலை டிசெம்பர் 26ஆம் திகதிவரை நீடிக்க மன்று உத்தரவு பிறப்பிக்கவேண்டும்’ என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார்.அரச சட்டவாதியின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த மன்று மனுவை வரும் 26ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளது .
Leave a Reply