
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளைப் பெற்று அதாவது 52.25 சதவீத வாக்குகளுடன் இலங்கையில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நேற்று நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றவரை அறிவிப்பதற்காக தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பரிய உரையாற்றினார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5 இலட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குளைப் பெற்று அதாவது 41.99 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார் என்றும் இந்த தேர்தலில் போட்டியிட்ட அனுர குமார திஷாநாயக்க 4 இலட்சத்து 18 ஆயிரத்து 553 வாக்குகளைப் பெற்று அதாவது 3.16 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 33 இலட்சத்து 87 ஆயிரத்து 951 ஆகும். இதில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 32 இலட்சத்து 52 ஆயிரத்து 499 ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 452 ஆகும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இம்முறை அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் 83.72 சதவீதமாகும் என்று தெரிவித்த அவர் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமானதுமாக நடைபெறுவதற்கு உதவிய அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். கைவிடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் அமைதியாக தேர்தலை நடத்துவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டார். வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி பக்கசார்பின்றி செயற்பட்டு வழங்கிய ஒத்துழைப்பிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர்களைப் போன்று அனைத்து அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச பிரதிநிதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்பின் காரணமாகவே இம்முறை ஜனாதிபதி தேர்தலை அமைதியான முறையில் நடாத்த முடிந்தது. இதற்காக உதவி, ஒத்துழைப்புக்களை வழங்கிய கண்காணிப்பாளர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட மற்றும் நாளாந்தம் சம்பளம் பெறும் ஊழியர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள், வாக்காளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இதேபோன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து அதிகாரிகள் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். இதேபோன்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த அனைத்து அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தோர் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் நன்றி என்றும் அவர் கூறினார்.
பொலித்தீன் மற்றும் சுவரொட்டிகளை பயன்படுத்தாது ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே மேற்கொண்ட அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் உடன்பட்டமை மற்றும் தெரிவித்த ஒத்துழைப்பை இட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இருப்பினும் தேர்தலில் நாம் சில விடயங்களில் தோல்வியடைந்தோம். இதில் முதலாவது அரச மற்றும் தனியார் ஊடகங்களை கட்டுப்படுத்துவதன் முடியாமையை இட்டு தாம் கவலையடைவதாகவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.
அரசாங்க ஊடகங்களில் சட்ட விரோதமாக செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு கொண்டுள்ள சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இதன்போது அவர் தெரிவித்தார். இதேபோன்று தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். முப்படையினர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் எதிர்காலத்தில் பாதுகாப்பு பிரிவு அங்கத்தவர்கள் சீருடையுடன் புகைப்படங்களை பயன்படுத்தி பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
சில அரசாங்க அதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறித்து தகவல் கிடைத்ததாகவும் அவர்களுக்கு எதிராக நிறுவன குற்றவியல் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மதத்தலைவர்களும் இந்த தேர்தலில் பாரிய அளவில் கூட்டங்கள் நடத்தியமை குறித்தும் நாம் கண்காணித்தோம். எதிர்காலத்தில் இவ்வாறானவற்றிற்காக அரசியல்வாதிகள் ஒன்றிணைய மாட்டார்கள் என்றும் எதிர்பார்ப்பதாகவம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Leave a Reply