ரணில் தலைமையில் அவசர கூட்டம்! பேசப்பட்டது என்ன?

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இன்று மாலை பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றிபெற்றிருந்தாலும், நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்கே பெரும்பான்மை உள்ளதால் உருவாகியுள்ள அரசியலமைப்பு குழப்பத்திற்கு தீர்வுகாணும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பாரிய வெற்றியைப் பதிவுசெய்தது.

இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்கே பெரும்பான்மை இருப்பதால் புதிய அரசாங்கத்தை ஸ்தாபித்து நடத்திச் செல்வதற்கான சங்கடமான நிலைமை பொதுஜன முன்னணி எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் அரசியல் குழப்பத்திற்கு முடிவுகட்டும் வகையில் இன்று மாலை அலரிமாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

இதன்படி விரைவில் நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று கொண்டுவந்து சபையை கலைப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி உத்தேசித்திருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “ஜனாதிபதி தேர்தலை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றிகொண்டுள்ளது. இருப்பினும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஐக்கிய தேசிய முன்னணிக்கே உள்ளது.

எதிர்வரும் இரண்டு, மூன்று தினங்களில் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்லவே எதிர்பார்க்கின்றோம். இப்போதும்கூட அமைச்சர்கள் சிலர் இராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கின்றனர்.

கிடைத்துள்ள பிரதிபலன்களுக்கு மத்தியில், நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சென்று இந்தப் பிரச்சினைக்கும் மக்களிடமே தீர்வைப் பெற நினைக்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்.

அதற்கு நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளினதும் இணக்கம் அவசியமாகும். அவ்வாறு பேச்சு எதிர்வரும் நாட்களில் இடம்பெறுமா என்று தெரியாது. அந்த வகையில் இன்று ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு நடந்தது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்துதான் இன்று பேசப்பட்டது. அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் யார் என்பது பற்றி இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நாளைய தினம் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கூடி பேச்சுநடத்தி சபையைக் கலைப்பதற்கான தீர்மானத்தை முன்வைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார்


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *