
ஜனாதிபதி தேர்தல் அமைதியாகவும் நீதியான முறையிலும் நடைபெற்றதோடு, வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை விடுத்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட சகல உத்தியோகத்தர்களுக்கும் எந்தவிதத்திலும் அரசியல் ரீதியான அச்சுறுத்தல் இன்றி சுதந்திரமாகவும் நீதியான முறையிலும் செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியதால் ஜனாதிபதி தேர்தலை அமைதியாகவும் நீதியாகவும் நடத்த வாய்ப்பு ஏற்பட்டது.
அதேபோல் வாக்காளர்கள் பயமும், சந்தேகமும் இன்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிப்பதற்கான சந்தர்ப்பமும் இதன் மூலம் ஏற்பட்டது.
சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து நாம் உருவாக்கிய இந்த கௌரவமான நிலைமை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
அவ்வாறான சூழலில் கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் ஐ.தே.கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி சார்பாகவும் தனிபட்ட முறையிலும் நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியாகிய நாள் முதல் கடைசி வரை மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் அனைத்து உறுபப்பினர்களுக்கும், சகல அரச உத்தியோகத்தர்களுக்கும், பொலிஸார் உள்ளிட்ட முப்படையினருக்கும் அதேபோல் நாட்டில் அமைத்தியை நிலைநாட்ட பாடுபட்ட அனைத்து பிரஜைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்´ என தெரிவித்துள்ளார்.
Leave a Reply