மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கஃபே அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கஃபே அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரியுள்ளது.

கஃபே அமைப்பு, ஜனாதிபதிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது பலர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக கரிசனை கொண்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அரசியல் ரீதியான சாதகமான பெறுபேற்றை அடைந்துகொள்ளும் வகையில், அதற்கேற்றவாறான தேர்தல்களை முதலில் நடத்திப்பார்ப்பது அரசியல் கலாசாரமாக காணப்படுகின்றது. கடந்த அரசாங்கமும் இந்த நடைமுறையை பின்பற்றியிருந்தமை வெளிப்படையான உண்மை.

ஆனாலும், தற்போது மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரம் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டின் கீழேயே மாகாண சபைகள் காணப்படுகின்றன.

மேலும் மாகாண சபை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை ஒரு ஜனநாயக செயன்முறையாக கருத முடியாது. எனவே, மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமான செயற்பாடாகும்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ‘காணாமல் போன மாகாண சபை தேர்தல்களை’ நடத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதை வலியுறுத்தினார்.

இதற்கு முன்னரான அரசாங்கங்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் மாகாண சபை தேர்தல்களை நடத்தியதோடு காலத்தையும் பணத்தையும் வீணடித்ததை நாம் அவதானித்தோம்.

எனவே, இது தொடர்பாக துரிதமாக ஆராய்ந்து மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்” என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *