
இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளித்து செயற்படுவார் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ் மக்கள் சமமாக நடத்தப்படுவதன் மூலம் அவர்களும் இலங்கையின் ஏனைய குடிமக்களை போல் சம அந்தஸ்துடையவர்களாக வாழ்வார்கள் எனவும் அவ்வாறான நிலைமை நாடு பிளவுப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கு உறுதுணையாக அமையும் எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து அன்னசின்னத்திற்கு வாக்களித்தன் மூலம் இலங்கையில் உரிமை சார்ந்த வேட்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற செய்தியை பன்னாட்டு சமூகத்துக்கும், இலங்கை ஆட்சியயாளர்களுக்கும் எடுத்து கூறியுள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும் போது இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாக்களிப்பு வீதம் அதிகளவில் காணப்பட்டதாக கூறியுள்ள அவர், தீர்க்கப்படாத தேசிய பிரச்சினைக்கு தீர்வு தருவதாக சஜித் பிரேமதாச கூறியதற்கு அமையவே அவருக்கு அதிகளவான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு அமைய அன்ன சின்னத்திற்கு ஒற்றுமையாய் வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply