
ரயில் கடவை காப்பாளர்களுக்கு புதிய ஆட்சியிலாவது தீர்வுகள் கிடைக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ரயில் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் ரொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கையில், “நாடு முழுவதும் 2,064 ஊழியர்கள் ரயில் கடவை காப்பாளர்களாக கடமையாற்றி வருகின்றனர்.
எமது பணிக்கான நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில் வெறும் 250 ரூபாய் சம்பளத்தில் மிகவும் சிரமப்பட்டு எமது குடும்ப வாழ்க்கையை கடந்த 7 வருடங்களாக நகர்த்தி வருகிறோம்.
எமக்கான நிரந்தர நியமனம் மற்றும் சம்பள அதிகரிப்பு தொடர்பாக கடந்த அரசாங்கத்திற்கு பலமுறை தெரிவித்தும் அது தீர்க்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் புதிய ஜனாதிபதி ஒருவர் ஆட்சிக்கு வந்துள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆட்சியில் நாடு சுபீட்சமடைந்து மக்களுக்கான விடுதலை கிடைத்து அடிமைப்படுத்தப்பட்டு, அரசியல் பழிவாங்கலிற்கு உட்படுத்தப்பட்டவர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என நம்புகிறோம்.
நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரடியாக சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாக கூறியிருந்தோம். அவர் எமது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதாக வாக்குறுதி அழித்துள்ளார்.
எனவே தற்போது அவர் பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில் எமக்கு வாக்குறுதி அளித்தபடி எமக்கான தீர்வினை பெற்றுதர வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply