
இலங்கையில் நவீன வசதிகளை கொண்ட புதிய கிரிக்கெட் மைதானமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. பாதுக்க பகுதியில் இந்த புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா டெலிகொமிற்கு சொந்தமான 36 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகள் அடங்கிய இந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு, இலங்கை கிரிக்கெட் சபையும் ஆதரவு வழங்கியுள்ளது.
மைதானத்தை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் செயற்படுத்தவுள்ளதுடன், கிரிக்கெட்டுக்கான கட்டமைப்புகளை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொள்ளவுள்ளது.
இதில், நவீன வசதிகள் கொண்ட மைதானம், ஐந்து ஆடுகளங்கள், வீரர்களுக்கான உடைமாற்றும் அறை, பயிற்சி ஆடுகளங்கள், நவீன முறையிலான வடிகாலமைப்பு வசதி மற்றும் ஏனைய கிரிக்கெட் மைதானம் ஒன்றுக்கு தேவையான வசதிகளை நவீன முறையில் அமைக்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இந்த மைதானத்தில் உள்ளூர் போட்டிகள், மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள் மற்றும் வளர்ந்து வரும் சர்வதேச அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் நடத்தப்படும் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
Leave a Reply