
டி 10 கிரிக்கெட் லீக் போட்டியில் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற பிரின்ட் அவுட் இல்லாத காரணத்தால் போட்டி ரத்து செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் டி 10 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் நடக்கிறது.
அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் டெக்கான், அபுதாபி அணிகள் மோதின. அபுதாபி அணி 10 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெக்கான் அணி 2.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது.
டி–10 கிரிக்கெட்டில் இரு தரப்பும் குறைந்தது 5 ஓவர்கள் விளையாடி இருக்க வேண்டும்.
இதனால், டெக்கான் அணிக்கு 5 ஓவரில் 62 ரன்கள் என ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி இலக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
மழை நின்றபின் பேட்ஸ்மேன்கள், எதிரணியினர் களமிறங்கினர். அம்பயர்கள் மட்டும் வரவில்லை. பின், திடீரென போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து டி 10 தொடரின் அமைப்பாளர்கள் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், மழை காரணத்தால் இரவு 9.30 மணிக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மழை நின்றதால் 9.46 மணிக்கு ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி மாற்றப்பட்ட இலக்குடன் ஆட்டம் துவங்க இருந்தது.
ஆனால் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி, எவ்வளவு இலக்கை என முடிவு செய்ய, அம்பயர்களுக்கு பிரின்ட் அவுட் கிடைக்கவில்லை. தவிர, நிர்ணயிக்கப்பட்ட நேரமும் தாண்டியதால் வேறு வழியில்லாமல் போட்டி ரத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply