சிங்கள பெளத்த அரசாங்கம் அமைக்க முற்பட்டால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கே பாதிப்பு – ஜே.வி.பி.

சிங்கள பெளத்த அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கே அதிக தாக்கத்தை செலுத்தும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அத்துடன், பொதுத் தேர்தலில் பலமான எதிர்க் கட்சியாக உருவாகவே முயற்சிக்கிறோம் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னராக அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்ற நகர்வுகள் குறித்தும் பொதுத் தேர்தல் குறித்தும் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு எதிர்பார்த்த அளவிற்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

இதற்கு சில காரணிகள் உள்ளன. பிரதான இரண்டு வேட்பாளர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுகின்ற நிலையில் மூன்றாம் நபருக்கு மக்கள் ஆதரவு கிடைப்பது கடினமான ஒன்றாகும். அதேபோல் ஊடகங்களும் பிரதான இரு வேட்பாளர்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்தின.

எவ்வாறு இருப்பினும் தேர்தலில் மக்கள் ஒரு ஆணையை கொடுத்துள்ளனர். அதற்கு அனைவரும் கட்டுப்பட்டாக வேண்டும். அடுத்த மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறும்.

இதில் ராஜபக்ஷ அரசாங்கம் சகல விதத்திலும் அதிகாரத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் அரைவாசி பேரையாவது விலைகொடுத்து வாங்கி தமது அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பார்கள்.

ஆகவே பலமான எதிர்க்கட்சி யார் என்பதே கேள்வியாக அமையும். ஐக்கிய தேசிய கட்சியினால் பலமான எதிர்கட்சியாக செயற்பட முடியுமா என்ற கேள்வி எழும். ஆகவே தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்ற கட்சியாக அடையாளபடுத்த சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.

மூன்று மாதகால இடைகால அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் யார் என்று பார்த்தால் இந்த அரசாங்கம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து­கொள்ள முடியும்.

கடந்த காலங்களில் ஊழல் வாதிகள், நாடாளுமன்றத்தில் அராஜகமாக செயற்பட்ட­வர்கள், பல குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள், வழக்குகள் உள்ளவர்களை ஜனாதிபதி அமைச்சர்களாக நியமித்துள்ளார். இவர்களை கொண்டு ஊழலில்லா அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுகின்றது.

மறுபுறம் இனவாத மதவாத அமைப்புக்கள் அனைத்துமே இன்று அமைதியாகியுள்ளன. ஆகவே இவர்கள் அனைவரும் யாருடைய தேவைக்காக செயற்பட்டனர் என்பதும் தெளிவாகியுள்ளது. எனவே மக்கள் இப்போதாவது உண்மைகளை உணர வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் மக்கள் இன்றும் அவற்றை அறிந்துகொள்ள தயாரில்லாத நிலையில் உள்ளனர்.

ஜனாதிபதி தனது பதவிப்பிரமாண நிகழ்வின் போதே தான் சிங்கள பெளத்த வாக்குகளில் வெற்றி பெற்றவன் என்ற அடையாளத்தை காட்டி சிறுபான்மை மக்களை அச்சப்படுத்தியுள்ளார். இவர்களின் அரசாங்கத்தையும் பெளத்த சிங்களவாத அரசாங்கமாக அமைக்கவே முயற்சிகளை எடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆகவே தமிழ் முஸ்லிம் மக்களை புறக்கணித்த அரசாங்கம் உருவாகினால் அதில் அதிக பாதிப்பு சிறுபான்மை மக்களையே சென்றடையும். அதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நாம் கருதுகின்றோம். எனவே எதிர்க்கட்சியாக நாம் பலமடையவே சகல மக்களையும் சந்தித்து எமக்கான ஆதரவை கேட்போம்” என்றார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *