
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, கடந்த தினங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும், நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டுவருவது தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டுவருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியினால் வெளியிடப்படும்.
அத்துடன், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் திகதியும், நேரமும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அந்த வர்த்தமானி அறிவித்தலை, எந்த நேரத்திலும் வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாக நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு, மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அழைப்பது, விசேட வைபவமாக இடம்பெறுவதுடன் இதன்போது சம்பிரதாயபூர்வமான அக்கிராசன உரையை நிகழ்த்தும் வாய்ப்பு ஜனாதிபதிக்கு உள்ளது.
இலங்கை வரலாற்றில் நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட 43 சந்தர்ப்பங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.
இறுதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 27ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் திகதிவரை 17 நாட்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply