
பா.ஜ.கவுக்கு ஆதரவு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் பதவியை இழக்க நேரிடும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், சிவசேனா தலைமையில் ஆட்சி நடக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் விரும்புகிறது. எங்கள் கூட்டணிக்கு 170 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது.
சில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தனர். தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களை அஜித் பவார் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து சென்றுவிட்டார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அஜித் பவார் முடிவு எடுத்துவிட்டார். மோசடியாக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளார். அவரது செயல் ஒழுங்கீனமானது.
பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எந்த தலைவர்களும், தொண்டர்களும் விரும்பவில்லை. சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன. பாஜகவுக்கு ஆதரவு தந்த உறுப்பினர்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் பதவியை இழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இன்று காலை திடீர் திருப்பமாக பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply