
பிரித்தானியாவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட இரு பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இலங்கை தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 2019 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இரு பிரதான கட்சிகளும் பிரெக்ஸிற் தொடர்பான விடயங்கள், சுகாதாரம் மற்றும் கல்விக்கான ஏற்பாடுகள், வரிக் கொள்கைகள் மற்றும் சர்வதேச கொள்கைகள் உள்ளிட்ட பல திட்டங்களை மக்களுக்காக முன்வைத்துள்ளன.
அந்தவகையில் இங்கிலாந்தின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய்வதற்கும், அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் தமது அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில் தொழிற்கட்சி தனது சர்வதேச கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாய நாடுகளின் உதவியை நாடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஆளும் கொன்சர்வேற்றிவ் கட்சி, பொதுத் தேர்தலுக்கான அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வெளியிட்டது. அதன்படி உலகம் முழுவதும் நல்லிணக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நீதிக்கான சர்வதேச முயற்சிகளுக்கு அதன் தொடர்ச்சியான ஆதரவை வலியுறுத்தும் என அறிவித்துள்ளது.
மேலும் சைப்ரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்னைகள் தொடர்பாகவும் கொன்சர்வேற்றிவ் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் அதன் பின்னரான காலப்பகுதிகளில் இலட்சக் கணக்கான இலங்கை தமிழர்கள் பிரித்தானியாவில் குடியேறியுள்ளனர். குறிப்பாக 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் மேற்கு லண்டன், தெற்கு லண்டன் பகுதிகளில் வாழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இரு பிரதான கட்சிகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply