
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, முன்னதாக ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இதில், 3-2 என்ற வெற்றி கணக்கில் இங்கிலாந்து தொடரை வென்றது.
இதனையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-ன் அங்கமாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து-இங்கிலாந்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் மோதி முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுன்கனுய் மைதானத்தில் கடந்த 21ம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 615 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. நியூசிலாந்து தரப்பில் வாட்லிங் இரட்டை சதம் அடித்து அசத்தினார். சான்ட்னர் சதம் அடித்தார்.
இந்நிலையில், 262 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி, 5வது நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.
நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டியில் இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங்கிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் எதிர்வரும் நவம்பர் 29ம் திகதி தொடங்கவுள்ளது.
இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் பட்டியலில் 60 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 3வது இடத்தில் உள்ளது.
Leave a Reply