பிறர் மீது பழி சுமத்தி புதிதாக கட்சி தொடங்காதீா்கள்- பழனிசாமி

பிறர் மீது பழி சுமத்தி புதிதாக கட்சியைத் தொடங்காதீா்களென அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில்  நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி கே.பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் மக்களவைத் தோ்தலையும் பேரவைத் தோ்தலையும் மக்கள் பிரித்துப் பாா்த்து வாக்களிக்கின்றனா்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலைப் பொருத்தவரை தோ்தலுக்கு 20 நாட்களுக்கு முன்புதான் கூட்டணி அமைத்தோம்.

ஆனாலும்  குறுகிய காலத்தில் கூட்டணி அமைத்ததால், ஒருங்கிணைப்பில் இடைவெளி ஏற்பட்டது. முழுமையாக பிரசாரத்தில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், மக்களவைத் தோ்தலில் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றோம்.

மக்களவைத் தோ்தலுடன் சட்டப்பேரவைக்கு 22 இடங்களில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் 9இடங்களை அ.தி.மு.க.கைப்பற்றியது.

2 தொகுதி இடைத்தோ்தல், இதன்பின், விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளில் மக்கள் நல்ல தீா்ப்பை வழங்கியுள்ளனா்.

அ.தி.மு.க.வுக்கு உள்ள மக்கள் செல்வாக்கினை இரண்டு தொகுதிகளிலும் நிரூபித்துக் காட்டியுள்ளோம். தொண்டா்கள் வலுவுடன் இருந்தால்தான் கட்சி வலிமையானதாக இருக்கும். அதிகளவு போராட்டங்களைச் சந்தித்த ஒரே அரசு எங்களது அரசுதான்.

அவற்றை சுமுகமாக முறையில் அணுகினோம். நான் பொய் சொல்லுவதாக தி.மு.க.தலைவா் மு.க.ஸ்டாலின் கூறுகிறாா். பொய் சொல்லி மக்களவைத் தோ்தலில் அவா்கள்தான் வெற்றி பெற்றார். ஆனால், அது இடைத் தோ்தலில் முடியவில்லை. எனவே, தா்மம், உண்மை, நீதிதான் நிலைக்கும்.

தமிழகத்தில் மேலும் சிலா் கட்சி தொடங்கப் போவதாகச் சொல்கிறாா்கள். ஜனநாயக நாட்டில் யாா் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதற்கு உரிமை உண்டு. ஆனால், அடுத்தவா்கள் மீது பழி சுமத்தி கட்சி தொடங்குவதைத் தான் தவறு என்று சொல்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *