
அஸ்ஸலாம் மாநிலத்தைச் சேர்ந்த தீவிரவாதக் குழுவான ‘போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி’ மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர் வன்முறை, கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், தேச விரோத சக்திகளுடன் கூட்டு சேர்ந்தது போன்ற நடவடிக்கைகளுக்காக அந்தக் குழு மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உட்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘இந்திய இறையாண்மை, பிராந்திய நாணயத்தன்மை ஆகியவற்றின் மதிப்பை குறைக்கும் வகையில் சட்டவிரோத, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களிடையே அச்சத்தையும் அமைதியின்மையையும் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி ஏற்படுத்தி வருகிறது.
போடோ இன மக்களுக்காக தனி பிரதேசம் கோரும் இலக்கை அடைவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை அந்த அமைப்பு மேற்கொள்கிறது.
அதன் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், தனது அமைப்புக்கு புதிதாக ஆள்சேர்த்து பயங்கரவாத, வன்முறை நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபடும் வாய்ப்புள்ளது.
எனவே, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 (உள்பிரிவு 1)}இன் கீழ், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகிறது. இந்தத் தடை உடனடியாக அமுலுக்கு வருகிறது.
கடந்த 2015 ஜனவரி முதல் 62 வன்முறைச் சம்பவங்களில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி ஈடுபட்டுள்ளது. இதில் பொதுமக்கள் 19 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை அந்த அமைப்பைச் சேர்ந்த 450 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 444 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்று அந்த அறிக்கையில் மத்திய உட்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Leave a Reply