
தற்போதைய நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் விரும்பும் நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அனைவரதும் ஜனநாயக கடமையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜீ.எல். பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “நடந்து முடிந்த தேர்தல், பொதுத் தேர்தலாக இருந்திருக்குமாயின் தெளிவான பெரும்பான்மை கிடைத்திருக்கும்.
நாடாளுமன்றத்தில் 120க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியும். அப்போது நாடாளுமன்றத்தின் முழு அதிகாரமும் எமக்கு கிடைத்திருக்கும்.
எனினும் தற்போதைய நிலைமையில் அனைவரும் இணைந்து பொது இணக்கத்தின் ஊடாக நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதே ஜனநாயக வழிமுறையாக இருக்கும்.
இதனூடாக தாம் விரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய புதிய நாடாளுமன்றத்தை மக்கள் தெரிவு செய்ய முடியும்.
மக்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அவர்கள், கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர். அவரது தேர்தல் அறிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளனர். அதனை அமுல்படுத்த மிகப் பெரிய ஆணையை வழங்கியுள்ளனர். இந்த செயற்பாட்டை முழுமைப்படுத்த நாடாளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply