மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட தமிழ் பெயர் பலகைகள்

தமிழ் பெயர் பலகைகள் விசமிகளால் அழிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவைத் தொடர்ந்து அவை மீண்டும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில இடங்களில் வீதிகளின் தமிழ் பெயர்ப் பலகைகள் அழிக்கப்பட்டமை தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் பிரதமர், இதுகுறித்து விசாரணையை நடத்துமாறும் குறித்த பெயர் பலகைகளை சீர்செய்யுமாறும் பணித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பிரதான இரு வேட்பாளர்களும் பெற்றுக்கொண்ட வாக்குகளை பிரதேசவாரியாக நோக்கும் போது சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்களில் பெருமளவானோர் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கே வாக்களித்திருந்தனர்.

எனினும் பெரும்பான்மையினத்தவர்களின் பெருமளவான வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றிபெற்று, நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து சில பிரதேசங்களிலும், குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும் சிறுபான்மையினத்தவர்களை அச்சுறுத்தும் வகையிலான சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

அவற்றின் தொடர்ச்சியாக பாணந்துரை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கிலப் பெயர்ப்பலகைகளில் தமிழ் பெயர்ப்பலகை மாத்திரம் அகற்றப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழ் பெயர்ப்பலகை அகற்றப்பட்டிருக்கும் புகைப்படங்களை தனது டுவிற்றர் பக்கத்தில் மங்கள சமரவீர பதிவேற்றம் செய்திருக்கின்றார்.

அத்தோடு, “தேர்தல் முடிவடைந்து ஒருவாரம் கடந்திருக்கும் நிலையில் மீண்டும் பெரும்பான்மைவாதத்தின் அழுக்கான முகம் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. தமிழில் காணப்பட்ட வீதிகளின் பெயர்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.

ஜனாதிபதி அவர்களே, இதுகுறித்த உங்களுடைய பிரதிபலிப்பிற்காக நாடு காத்துக் கொண்டிருக்கிறது” என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே பிரதமர் மீண்டும் தமிழ் பெயர்ப் பலகைகளை சீர் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *