முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியிலேயே பங்களாதேசை வீழ்த்தி இந்தியா வெற்றி!

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 2-0 என்ற கணக்கில் இந்தியா அணி கைப்பற்றியது.

அத்தோடு இத்தொடரின் வெற்றியின் மூலம் 120 புள்ளிகளை பெற்றுக்கொண்ட இந்தியா அணி, 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

கடந்த 22ஆம் திகதி கொல்கத்தா- ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸிற்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ஓட்டங்களை பெற்றது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக சத்மான் இஸ்லாம் 29 ஓட்டங்களையும், லிடொன் தாஸ் 24 ஓட்டங்களையும், நயீம் ஹஸன் 19 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். ஏனைய வீரர்கள் ஓற்றை இலக்க ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், இசாந் சர்மா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக, அணித்தலைவர் விராட் கோஹ்லி 136 ஓட்டங்களையும், புஜாரா 55 ஓட்டங்களையும், அஜிங்கியா ரஹானே 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, 241 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 195 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி, இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது பங்களாதேஷ் அணி சார்பில், அதிகபட்ச ஓட்டங்களாக, முஷ்பிகுர் ரஹீம் 74 ஓட்டங்களையும், மொஹமதுல்லா 34 ஓட்டங்ளையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியா அணியின் பந்துவீச்சில், உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளையும், இசாந் சர்மா 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியிலேயே, இந்தியா அணி வெற்றிபெற்று சாதித்தது.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி கண்ட ஒரே அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இதுதவிர, இந்திய ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் பங்கு இல்லாமல் இந்தியா அணி பெற்ற முதல் வெற்றியாக இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *