அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள்- ஜனாதிபதியிடம் ரணில் வலியுறுத்தல்

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில்  ஈடுபடுவதை உடன் நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளரால் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்  எழுப்பப்பட்ட கேள்விக்கு  பதிலளிக்கும்போதே  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடற்படையினருடன் தொடர்புடைய மாணவர்கள் கடத்தல், லசந்த விக்கிரமதுங்க கொலை, வசீம் தாஜுதீன் கொலை, மருத்துவர் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்ட கருக்கலைப்பு குற்றச்சாட்டு வழக்கு, உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கு, கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் விசாரணைகளை  நடத்தி வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபயசேகர அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தெற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று  அரச நிறுவனங்களில் பணிப்பாளர், தலைவர் பதவிகளில் திறம்படச் செயற்பட்டு வந்த பலரையும் இடமாற்றம் செய்யும் நடவடிக்கை மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எமது நல்லாட்சியில் பொறுப்பு வாய்ந்த அரச துறைகள் மற்றும் பிரிவுகளில் இருந்த பணிப்பாளர்கள், தலைவர்கள் எவ்வித அழுத்தங்களுமின்றி சுயாதீனமாகச் செயற்பட்டார்கள். அவர்கள் தங்கள் பணிகளைத் திறம்படச் செய்தார்கள். சட்டத்தை மதித்து நீதியின் பிரகாரம் செயற்பட்டார்கள்.

நாட்டின் புலனாய்வுப் பிரிவும் நீதித்துறையும் எந்தவித மிரட்டல்களுமின்றி சுயமாக இயங்கியது. கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள், மோசடிக்காரர்கள் மற்றும் திருடர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே,  நாட்டின் புதிய ஜனாதிபதியினதும் அவரின் சகோதரரினதும் தலைமையில் உருவாகியுள்ள புதிய அரசும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும். மக்கள் ஆணைக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும்.

மேலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவதை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *