மாவீரர் தினம்: இராணுவத்தினரின் செயற்பாட்டினால் அச்சத்தில் மடு மக்கள்

வடக்கு- கிழக்கு பகுதிகள் முழுவதும் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், மடு- பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக நினைவு தூபி மற்றும் நினைவு கற்கள் அனைத்தும் இராணுவத்தினரால் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இராணுவத்தினரின் குறித்த செயற்பாட்டின் காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘ தமிழர் தாயக பகுதிகளில் நாளை (புதன் கிழமை) அனுஷ்டிக்கப்பட இருக்கின்ற மாவீரர் தினத்திற்கென மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு பொது சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மன்னார்- மடு, பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவு தூபி மற்றும் கற்கள் அனைத்தும், நேற்று  இரவு இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் அதிகளவிலான இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ வாகனங்களும் அப்பகுதியில் காணப்பட்டதாகவும்  மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் குறித்த துயிலும் இல்லம் சிரமதான பணிகளின்போது, பொலிஸ், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் பலர் வருகை தந்து பொது மக்களை புகைபடம் எடுத்து, அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

புதிய ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் நினைவு கூறுமாறு தெரிவித்துள்ள நிலையிலும் நாளைய தினம், மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *