
அணைகள் பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலே இருக்கும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழக அரசுக்கு உறுதி அளித்துள்ளார்.
அணைகள் பாதுகாப்புக்கென தனி அமைப்பு உருவாக்குவதற்கான சட்டமூலத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த சட்டமூலம் தமிழக நலனுக்கு எதிராக இருக்கும் என தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு உட்பட ஐந்து அணைகள் ஏனைய மாநிலங்களில் உள்ளன. ஆனால் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. புதிய சட்டமூலத்தால் தமிழகத்தின் உரிமை பறிபோகும் என தமிழக அரசு கவலை தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் மின்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட குழுவினர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை டில்லியில் நேற்று (திங்கட்கிழமை) நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது சட்டமூலத்திலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “புதிதாக கொண்டுவரப்படும் சட்டமூலத்தால் ஏற்கனவே உள்ள நடைமுறைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. முல்லைப் பெரியாறு அணையின் உரிமை நிர்வாகம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுடன் தமிழகத்துக்கு உரிய நீரின் அளவு என எதிலும் மாற்றம் செய்யப்படாது.
தமிழக அரசு ஏற்கனவே இந்தப் பிரச்சினை குறித்து தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் சட்டமூலத்தில் தேவையான திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பானது தமிழக அரசுக்கு உதவி செய்யும் வகையிலேயே இருக்கும். நீண்டகாலமாக மேற்கொள்ளப்படாத பராமரிப்பு பணிகள் தேவைப்பட்டால் அணையின் உயரத்தை அதிகரிப்பது போன்றவற்றில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு உதவும்.
நாடாளுமன்றத்திலும் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்று தெரிவித்துள்ளோம். மேலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு தமிழக அரசுக்கு உதவிட வேண்டும் என கேரள அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனஅதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply