ஐ.எஸ் தலைவரை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய்க்கு விருது வழங்கிய ட்ரம்ப்!

தலைமறைவாகியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதியை கண்டுபிடிப்பதற்கு உதவி செய்த மோப்ப நாயான “கோனன்” ஐ வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

சிரியாவில் பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் அல் பாக்தாதியை கடந்த மாதம் அமெரிக்க படையினர் கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர்.

தப்பித்துச் செல்வதற்கு வேறு வழியில்லாத நிலையில் அல் பாக்தாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து உயிரிழந்தார். முன்னதாக, அல் பாக்தாதியின் மறைவிடத்தை கண்டுபிடிப்பதில் அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாயான கோனன் முக்கிய பங்காற்றியது.

அல் பாக்தாதியின் இருப்பிடத்தை மோப்பம் பிடித்து, அவரை விரட்டி சென்றது. ஆனால் பாக்தாதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் கோனன் காயமடைந்தது.

மோப்ப நாயான கோனனை வெகுவாக பாராட்டிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பாக்தாதியை விரட்டியடித்து தற்கொலை செய்ய தூண்டிய தீரமான நாய் இதுதான் என கூறி அதன் புகைப்படத்தை டுவிட்டரில் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் குண்டு வெடிப்பு காயங்களில் இருந்து தேறிய மோப்ப நாய் கோனனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, ஊடகவியலாளர்களுக்கு கோனனை அறிமுகம் செய்து வைத்து பேசிய ட்ரம்ப், இந்த மோப்ப நாயை, தான் நேசிப்பதாக தெரிவித்தார்.

மேலும் கோனன் உலகின் மிகச்சிறந்த நாய்களுள் ஒன்றாக திகழ்வதாகவும், இது தமது நாட்டுக்கு பெருமையளிப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *