
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கார்மேல் நகர் கிராம மக்களின் குடி நீர் பிரச்சனைக்கு எதிர்வரும் 6 மாத காலத்தினுள் நிரந்தரத் தீர்வு பெற்றுத்தரப்படும் என முசலி பிரதேச சபை தவிசாளர் எம்.சுபிஹான் தெரிவித்துள்ளார்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சின்ன புள்ளச்சி பொற்கேணி, கார்மேல் நகர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக குடி நீர் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் முசலி பிரதேச சபையின் தவிசாளருக்கு கார்மேல் நகர் கிராம மக்கள் தங்களது பிரச்சினைகளை தெரியப்படுத்தி இருந்தார்கள்.
அதற்கு அமைவாக நேற்று காலை கார்மேல் நகர் கிராம மக்களுடன் குடி நீர் பிரச்சினை தொடர்பான அவசர கூட்டம் முசலி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் உரையாற்றும் போதே தவிசாளர் எம்.சுபிஹான் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முசலி பிரதேசத்தில் பாரிய சவாலாக உள்ளது இந்த குடிநீர் பிரச்சனை. கார் மேல் நகர் கிராமத்தில் இருந்து ஆழ் துளை கிணறு மூலம் வேறு இடங்களுக்கு குடிநீர் செல்கிறது.
ஆனால் இந்த கிராமத்து மக்களுக்கு குடி நீர் பிரச்சினை உள்ளதை நினைக்கையில் மன வேதனையாக உள்ளது.
இதனை முன்னைய ஆட்சியாளர்கள் செய்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஆனால் எமது சபையும் எவ்வளவோ முயற்சி எடுத்தது. சில அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் பல இலட்சம் ரூபாய் பணம் திரைசேரிக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டது.
ஆனாலும் நீர் சபை, மாகாண சபை மற்றும் திணைக்களங்களிடம் பேசி இதற்கு தேவையான நிதிகளை பெற்று கார் மேல் நகர் கிராமத்திற்கும் முசலியின் பல கிராமங்களில் உள்ள குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கு ஆறுமாத காலம் தேவைப்படும்.
நிச்சயமாக குறித்த ஆறு மாத காலத்திற்குள் முசலிப் பிரதேசத்தின் குடி நீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.கார்மேல் நகர் மக்களின் அவசர குடி நீர் தேவைகளை கருத்தில் கொண்டு வாரத்திற்கு 5 ஆயிரம் லீற்றர் குடி நீர் பிரதேச சபையால் வழங்கப்படும். அதற்குரிய நீர்த்தாங்கிகளை மாத்திரம் பிரதேச செயலகம், சனசமூக நிலையங்களில் பெற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில் முசலி பிரதேச சபையின் உறுப்பினர் தஸ்னீமா, சிலாவத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர், கார் மேல் நகர் மாதர் சங்கத்தினர் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply