விடுதலைப் போரில் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு தினம்

விடுதலை போரில் தமது உயிரை ஆகுதியாக்கியவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த இன விடுதலை போராட்டத்தில், தமது உயிரை தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் வருடாவருடம் கார்த்திகை மதம் 27ம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

விடுதலை புலிகளின் முதல் போராளியான  சங்கர்  எனப்படும் செ.சத்தியநாதன் வீரமரணம் அடைந்த தினமாக நினைவுகூரப்பட வேண்டும் என  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பால் 1989ம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில், இன்று வரை குறித்த நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வானது இலங்கை, புலம்பெயர் நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருவதுடன், இந்த நாளில் மாலை 06.05 மணிக்கு விடுதலைப் போரில் உயிர்நீத்த அத்தனை பேரின் நினைவாகவும் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கமாக காணப்படுகிறது.

யுத்தம் மௌனிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் மாவீரர்களுக்கென விடுதலை புலிகளால் அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக துயிலும் இல்லங்களில் குறித்த நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வந்த போதிலும் 2009ம் ஆண்டுக்கு பின்னர் குறித்த பகுதிகளில் அமைக்கப்பட்ட நடுகற்கள் இராணுவத்தினரால் இல்லாதுசெய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் இலங்கையின் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் எவ்விதமான மாவீரர் தின அனுஸ்டிப்புகளும் மேற்கொள்வதற்கு இலங்கை அரசு அனுமதித்திராத நிலையில், 2015ம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மக்கள் குறித்த துயிலும்   இல்லங்கள் உட்பட்ட பல பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதலாவது மாவீரர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இம்முறை மாவீரர் தின அனுஸ்டிப்புகளுக்கு புதிய அரசாங்கம் தடையாக இருக்காது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் உட்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் வடக்கின் சில பகுதிகளில் குறித்த அனுஸ்டிப்புக்கு  பாதுகாப்பு படையினரால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கின் மாவீரர் மயானங்கள் பொதுமக்களால் திருத்த வேலைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகளுக்கு தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *