இரத்த பரிசோதனைக்கான ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து வவுனியா தமிழ் மாணவி சாதனை

வவுனியா, சைவபிரகாச மகளிர் கல்லூரியில் 12ம் ஆண்டில் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவி இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை நோயாளியிடமிருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDELINJECTOR) கண்டுபிடித்து மாகாண ரோ போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

மாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்கேற்பதற்காக பாடசாலை அதிபர் பி.கமலேஸ்வரியின் ஒத்துழைப்புடனும், பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப்பொருட்களின் ஊடாக ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக 2009ஆம் ஆண்டு களமுனையில் தனது தந்தையை இழந்த இம்மாணவி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த போதிலும் விஞ்ஞான தொழில்நுட்ப பாடத்தினை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுவருகின்றார்.

இந்நிலையிலேயே மாகாண மட்ட போட்டியில் பங்கேற்க ஆர்வம் கொண்டு இக்கண்டுபிடிப்பில் ஈடுபட்ட போதிலும், போதியளவு நிதி வசதிகள் இல்லாமையினால் அதிபரினூடாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சிறு தொகை பணத்தினை பெற்று தனது முயற்சியை ஆரம்பித்திருந்தார்.

இதன்போது பாவணைக்கு உதவாத கழிவுப்பொருட்களை தனது கண்டுபிடிப்புகளுக்காக குறித்த மாணவி பயன்படுத்தியுள்ளார்.

இது குறித்து பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்,

ரோகிதா புஸ்பதேவன் ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டு பெண்களாலும் முடியும் என வெளிப்படுத்தியுள்ளார்.

மாகாண மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்று வவுனியா மாவட்டத்திற்கும், எமது வலயத்திற்கும், பாடசாலைக்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.

அத்துடன் இந்த மாணவி குறித்த கண்டுபிடிப்பை மேலும் மெருகூட்டி அதனை அனைவரும் பயன்படுத்தும் விதமாக உருவாக்குதவற்கு சில பொருட்களை வெளிநாட்டில் இருந்து பெறவேண்டியுள்ளது.

அதனை குறித்த மாணவி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் குறித்த கண்டுபிடிப்பை பதிவு செய்வதற்கான முயற்சிகளிலும் நாம் ஈடுபட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *