நியூஸிலாந்து தொடருக்கு முன்னர் சாஹா குணமடைந்து விடுவார்: கிரிக்கெட் சபை நம்பிக்கை

இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் விருத்திமான் சாஹா, எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக குணமடைந்து விடுவார் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் விருத்திமான் சாஹாவுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.

முதலுதவி சிகிச்சை சாஹாவுக்கு அளிக்கப்பட்ட நிலையில், அதன்பின் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அவரின் விரல்களில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் விருத்திமான் சாஹாவுக்கு நேற்று முன் தினம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது.

இந்த நிலையில் அவருடைய காயத்தின் தன்மை குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், ‘பிசிசிஐ அமைப்பின் மருத்துவக் குழுவில் உள்ள கைமணிக்கட்டு நிபுணர் உதவியுடன், விருத்திமான் சாஹாவின் கை விரல்களில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு நேற்று முன் தினம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சாஹா சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் குணமடைந்து தேசிய கிரிக்கெட் நிலையத்துக்கு திரும்புவார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்திய அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ‘பெப்ரவரி 14ஆம் திகதி நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. வெலிங்டன், கிறிஸ்ட் சர்ச் நகரில் இந்த இரு டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக ஹேமில்டனில் 3 நாட்கள் பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஜனவரி மாதத்தில் 5 ரி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. ஆகையால், டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பாக சாஹா தனது காயத்தில் இருந்து குணமடைந்துவிடுவார் என சபை நம்புகிறது’ எனத் தெரிவித்தன.

2018ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் தோள்பட்டை காயம் காரணமாக சிகிச்சையில் இருந்த சாஹா, ஒக்டோபர் மாதம் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றார்.

காயம் காரணமாக சாஹா ஓய்வில் சென்றபின் டெஸ்ட் போட்டிக்கு ரிஷப் பந்த்தை தயார் செய்யும் முனைப்பில் தேர்வுக் குழுவினர் இறங்கினர்.

ஆனால், சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாகச் செயற்பட்ட ரிஷப் பந்த் பெரும்பாலான போட்டிகளில் ஏமாற்றம் அளித்தார். இந்த சூழலில்தான் அனுபவம் வாய்ந்த சாஹா மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டார்.

கடந்த வாரம் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியின்போதுதான் சாஹா டெஸ்ட் போட்டிகளில் 100 பிடியெடுப்புக்களை எடுத்து சாதனை படைத்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

35 வயதான விருத்திமான் சாஹா, இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளில் 1238 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியக் கிரிக்கெட் அணி, நீண்டதொரு தொடரில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அங்கு செல்லும் இந்தியா அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *