மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு

மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து ‘மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணி’ என்ற பெயரில் ஆட்சி அமைத்துள்ளன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில் மகாராஷ்டிராவில் 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு அமைகிறது.

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார். டிசம்பர் 3 ஆம் திகதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவருக்கு ஆளுநர் ‘கெடு’ விதித்து உள்ளார்.

சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழா இன்று மாலை 6.40 மணிக்கு, சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் சமாதி இருக்கும் மும்பை தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு மாநில தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிவாஜிபார்க் பகுதியில் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.

மகாராஷ்டிராவில் ஆரம்ப காலம் முதல் இருந்து வந்த காங்கிரசை வீழ்த்துவதற்காக இந்துத்வாவை தீவிர கொள்கையாக கொண்ட சிவசேனாவும், பாரதீய ஜனதாவும் 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது இணைந்தன.

இரண்டு கட்சிகளும் 1995ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலையும் சேர்ந்தே சந்தித்தன. அந்த தேர்தலில் முதல் முறையாக சிவசேனா தலைமையிலான அந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

அக்கட்சியை சேர்ந்த மனோகர் ஜோஷியும், பின்னர் நாராயண் ரானேயும் முதல்வராக பதவியேற்றார்கள். பாரதீய ஜனதாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அக்கட்சியின் கோபிநாத் முண்டே அந்த பதவியை வகித்தார்.

இந்த ஆட்சி 1999ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்தது. இதையடுத்து நடந்த தேர்தலில் தோல்வியை தழுவிய இந்த கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

2014ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, தொகுதி பங்கீடு பிரச்சினை காரணமாக பாரதீய ஜனதாவுடனான 25 ஆண்டுகால கூட்டணியை சிவசேனா முறித்தது.

எனினும் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெரும்பான்மை இல்லாமல் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்த நிலையில், மீண்டும் பாரதீய ஜனதாவுடன் நெருக்கம் காட்டி ஆட்சியிலும் சிவசேனா அங்கம் வகித்தது.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலை இரண்டு கட்சிகளும் சேர்ந்தே சந்தித்த நிலையில், முதல்வர் பதவி விடயத்தில் ஏற்பட்ட மோதலின் பலனாக 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைகிறது.

எனவே இம் முறை சிவசேனா கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *