
ஊழல் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அபிமன்யூ மிதுனுக்கு பொலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பிரிமீயர் லீக் டி-20 போட்டிகள் நடந்து வருகின்றன.
இதேபோல கர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பிரிமீயர் லீக் போட்டியில், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சில கர்நாடக வீரர்கள் மீது புகார் எழுந்தது.
இதை விசாரித்து வந்த கிரைம் பிரிவு பொலிசார் பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அஸ்பக் தாரா, கிரிக்கெட் வீரர்கள் ஜி.எம்.கவுதம், அப்ரார் காஸி உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகவைச் சேர்ந்த, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யூ மிதுனுக்கும் விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில குற்றப்பிரிவின் இணை ஆணையர் சந்தீப் பட்டீல் கூறுகையில், மிதுன் குறித்த புகாரை விசாரிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணிக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என்றார். கர்நாடக பிரிமீயர் லீக் மேட்ச் பிக்சிங் வழக்கில், சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபிமன்யூ மிதுன், இந்தியாவுக்காக 4 டெஸ்ட் போட்டிகளிலும் 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply