தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற 13 வது திருத்தத்தை அமல்படுத்துவது அவசியம் – மோடி அதிரடி

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் முகமாக 13 வது திருத்தத்தை அமல்படுத்துவது அவசியம் என்றும் நல்லிணக்க நடைமுறையொன்று இலங்கையில் முன்னெடுக்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சற்று முன்னர் இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மோடி மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை ஜனாதிபதியான பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவை முதல் வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டு வந்ததையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்தியா இலங்கையின் மிகவும் நெருக்கமாக நண்பன். இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் இலங்கையில் 46,000 வீடுகளை கட்டியுள்ளோம். மேலும் 14,000 வீடுகள் தமிழ் மக்களுக்காக கட்டப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சூரிய சக்தி மூலமான திட்டங்களுக்கு 100 மில்லியன் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இன்று நாங்கள் இரு நாட்டின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினோம். இந்தியாவும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியது. ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கை மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம்.

மேலும் இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் கடன் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட 50 மில்லியன் டொலர் கடன் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம் குறித்த எங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். ஜனாதிபதி ராஜபக்ஷ, இன நல்லிணக்கம் குறித்த தனது அரசியல் கண்ணோட்டத்தைப் பற்றி என்னிடம் கூறினார். நல்லிணக்க நடைமுறையில் 13 வது திருத்தத்தை அமல்படுத்துவதும் அடங்கும்.

இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதனம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

நாங்கள் அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை பின்பற்றுகின்றோம். அந்தவகையில், ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை மற்றும் இந்தியாவின் நலனுக்கு இது மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகும்” என கூறினார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *