
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
வாகரை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, கிரான் போன்ற பிரதேசத்திலுள்ள பல வீதிகள் நீர் நிரம்பி காணப்படுகின்றது.
அத்துடன், சிலரது குடியிருப்பு காணிக்குள் நீர் காணப்படுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகின்ற நிலையில் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு, விவசாய பயிர் செய்கை நிலங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளும் வெள்ள நீர் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றது.
தொடர் மழை காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காலநிலை மாற்றம் காரணமாக மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
இதன் காரணமாக மீனவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு காணப்படுவதுடன், அன்றாட தொழிலுக்கு செல்லும் கூலித் தொழிலாளர்களும் தொழிலுக்குச் செல்லாமல் வீட்டில் முடங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பின் பெரும்பாலான பிரதேசங்களில் வீதிகளில் உள்ள நீர் வடிந்தோடுவதற்கு ஏற்ற வகையில் வடிகால்கள் அமைக்கப்படாமையினால் மழை காலத்தில் வெள்ள நீர் வீதிகளிலும், மக்களின் குடியிருப்புக்களிலும் செல்லும் நிலை காணப்படுகின்றதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் அங்குள்ள குளங்களில் வான் கதவுகள் திறக்கும் பட்சத்தில் பல தாழ்நில கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலை உருவாகக் கூடும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனர்த்தக் குழு தயார் நிலையில் செயற்பட்டு அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு , படகுச்சேவை, அனர்த்த நிவாரண சேவை, பாதுகாப்பு பிரிவு, பொதுமக்கள் மற்றும் முப்படையினர் தயார் நிலையில் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply