வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஸ்டாலின்

வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும், ஐ.டி.நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படுவதைத் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கோவை மாநகராட்சியில் 549 துப்புரவுப் பணியாளர்கள் வேலைக்கான வெற்றிடத்துக்கு பொறியாளர்களும், பட்டதாரிகளும் விண்ணப்பித்தார்கள் என்ற செய்தி ஊழலையே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.ஆட்சியில், தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவிற்கு கோர தாண்டவமாடுகிறது என்பது வெளிப்பட்டுள்ளது.

மேலும், புதிய தொழில்கள், வேலைவாய்ப்புகள் எதையுமே உருவாக்காமல், உருவாக்குவது குறித்துச் சிந்தித்துக் கூடப் பார்க்காமல், அதைப் பற்றிய எவ்விதக் கவலையும் கொள்ளாமல், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தி வரும் அ.தி.மு.க.ஆட்சியில் ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை, தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டிலுள்ள ஐ.டி.நிறுவனங்கள் எல்லாம், ஏற்கனவே ஏதாவது ஒரு செயற்கைக் காரணத்தைச் சுட்டிக்காட்டி, ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.டி.ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

அந்தவகையில் மத்திய, மாநில அரசுகள் ஐ.டி.ஊழியர்களின் பணிக்கு ஏற்பட்டுள்ள அபாயம் குறித்து, அதைத் தடுப்பதற்கு அக்கறை காட்டவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது” என கூறியுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *