யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவு குறித்து ஆராயும் விசேட கூட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவுக்கான தேர்தல் நாளைத் தீர்மானிக்கும் விசேட கூட்டம் இன்று  (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி, கடந்த ஒக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில் இரண்டு புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் உட்பட ஒன்பது பேர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

மேலும் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் துணைவேந்தர் தெரிவுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், முன்னாள் துணைவேந்தரும், தற்போதைய விண்ணப்பதாரிகளில் ஒருவருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தததையடுத்து துணைவேந்தர் தெரிவுக்கான பணிகளை ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு பணிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் தற்போது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், துணைவேந்தர் தெரிவுக்கான பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளில் பல்கலைக்கழக நிர்வாகம் இறங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள ஒன்பது பேரினதும் தகுதி, தராதரங்களை ஆராய்வதற்கான மதிப்பீட்டுக் குழுவைத் தெரிவு செய்வதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவை இன்று கூடவுள்ளது.

இன்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்படும் மதிப்பீட்டுக்குழுவின் பரிந்துரைகளின் பின் துணைவேந்தர் தெரிவுக்கான தேர்தல் திகதி நிர்ணயம் செய்யப்படும். பல்கலைக்கழக சட்ட ஏற்பாடுகளுக்கமைய குறித்த தினத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த அனைவரும் தத்தமது தூர நோக்குகள் குறித்து பேரவை உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததன் பின் தேர்தல் இடம்பெறும்.

பேரவை உறுப்பினர்களின் வாக்களிப்பின் முடிவில் அதிக வாக்குகளைப் பெறும் முதல் மூன்று பேரது விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கமைய இலங்கையின் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, புதிய துணைவேந்தரை ஜனாதிபதியே நியமிப்பார்.

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற நாள் முதல், அரச கட்டமைப்புகளில் அதிரடி மாற்றங்கள் இடம்பெற்று வருகின்ற நேரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவும் மிக முக்கியமானதொரு எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *