
வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி முதல் இம்மாதம் வரை 510பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது பெய்துவரும் பருவ மழையினால் மேலும் டெங்கு நுளம்புகள் பெருக்கெடுக்கும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்களது இருப்பிடங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்குமாறும் பொது சுகாதாரப்பரிசோதகர்களின் டெங்கு ஒழிப்பு செயற்திட்ட நடவடிக்கைக்கு பொது மக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் வவுனியா பொது சுகாதாரப்பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குருமன்காடு, காளிகோவில், பூங்கா வீதி போன்ற பகுதிகளில் தற்சமயம் நுளம்புகள் பெருகும் இடமாக அடையாளம் காணப்பட்டு அதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏனைய பகுதிகளில் நுளம்பு பெருக்கம் பகுதியளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையும் காணப்படுகின்றது.
எனினும் தற்பொழுது பெய்துவரும் பருவ மழையினால் டெங்கு நுளம்புகள் பெருகும் நிலைமை மேலும் அதிகரித்துள்ளன.
கடந்த 13.09.2019 அன்றிலிருந்து டெங்கு நுளம்பு தொற்று அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இவ்வருடம் முதல் இன்று வரையான காலப்பகுதிவரையும் 510பேருக்கு டெங்கு நுளம்பு தொற்று ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை முதல், பொலிஸாருடன் இணைந்து நகரில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் பார்வையிடப்பட்டு நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்கள் அவதானிக்கப்பட்டால் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே இருப்பிடங்கள், திணைக்களங்கள், அரச, தனியார் நிலையங்கள், விடுதிகள் அனைத்தையும் சுத்தம் செய்து துப்பரவாகவும், தூய்மையாகவும் அனைவரும் வைத்திருக்க வேண்டும்.
பரிசோதனை மேற்கொள்ள செல்லும் பொது சுகாதாரப்பரிசோதகர்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை மக்கள் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply