
நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் கட்டாயமாக 19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோட்டபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 29ஆம் திகதி இந்தியா சென்றிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் த ஹிந்து ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கூறுகையில், நாடொன்றை நிர்வகிக்க ஒரு சிறந்த தலைமைத்துவம் வேண்டும். அந்த தலைமைத்துவம் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருக்கவில்லை.
அதனால் தான் ரணிலும், மைத்திரியும் ஒவ்வொரு சந்தரப்பத்திலும் முரண்பாடாக செயற்பட்டார்கள். அதனால் நாட்டிற்கு முதலீட்டாளர்கள் வரவில்லை.
19ஆம் திருத்த சட்டம் முழுமையாக நாட்டை பாதித்துள்ளது. அது எந்த விதத்திலும் பயனற்றது. இதேவேளை 13ஆம் திருத்த சட்டம் என்பது இந்த நாட்டு அரசியல் அமைப்பில் ஒரு பிரிவு.
அதிலுள்ள பல விடயங்கள் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் அதில் உள்ளடங்கியுள்ள பொலிஸ் அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க முடியாது. அதற்கான மாற்று வழி தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.
தமிழர்களுக்கு நன்மைகள் செய்வது மற்றும் அவர்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்வது மிக முக்கியம்.
அவர்களின் சுதந்திரம் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பாக இலங்கையின் அரசியல் அமைப்பில் போதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள சிங்கள மக்கள் எப்பொழுதும், தமிழர்களுக்கான வாழ்வாதார உதவி திட்டங்களை செய்ய வேண்டாம் என கூறியதில்லை.
70 வருடங்களாக ஆட்சி புரிந்த தலைவர்கள் அனைவரும் அதிகாரங்களை பகிர்ந்து கொடுப்பதையே உறுதி மொழியாக வழங்கியிருந்தார்கள்.
இறுதியில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டார்கள். அரசியல் ரீதியான பிரச்சினைகள் வேறு. வடக்கு, கிழக்கு பகுதிகளில் நான் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகள் தொடர்பாக எதிர்வரும் ஐந்து வருடங்களில் நீங்கள் காணக்கூடியதாக இருக்கும்.
வெள்ளை வான் கலாச்சாரம் மற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றமை தொடர்பில் என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை.
2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் எமது அரசாங்கம் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாம் பின்னாய்வு செய்துள்ளோம்.
அதனை தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகுந்த விசாரணைகளை மேற்கொண்டு அதிகாரம் மேற்கொள்வதற்கான அதிகாரங்களை வழங்கியிருந்தோம்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய ஆதாரங்கள் தமக்கு கிடைக்கவில்லை என அவர்கள் கூறியிருந்தார்கள். நாம் குற்றங்கள் இழைத்திருந்தால் ஏன் கடந்த அரசாங்கம் எம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிலிருந்தே தெரிகிறதல்லவா நாம் குற்றம் அற்றவர்கள் என்பது. யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் எமக்கு ஊடகங்கள் தொடர்பாக சில நிபந்தனைகள் விதிக்க நேரிட்டது.
ஆனால் அதன் பின் அவர்களுக்கு சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இந்த நாட்டில் யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் நாம் அல்ல.
இருந்தாலும் மகிந்த அராசங்கமே யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply