சிங்கள மக்கள் கொந்தளித்தால் மீண்டும் வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் நிம்மதியாகவே வாழ முடியாது

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது 13ஆவது சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்திய பிரதமர் மோடி, கோட்டாபயவிடம் கூறியதை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ஜனாதிபதி கோட்டாபயவின் இந்த விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களை கண்டிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பாளர்களுக்கான சந்திப்பு நுவரெலியா நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் இன்னும் இன பிரச்சனைக்கு உரிய தீர்வு எட்டபடாத நிலையில் இருக்கின்றது. நாடும் உரிய அபிவிருத்தியை நோக்கி செல்ல வேண்டுமானால் இந்த நாட்டில் நீண்டகாலமாக காணப்படும் இன பிரச்சனைக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.

எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது இந்தியா சென்று நாடு திரும்பி உள்ளார். இவரின் விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் 13ஆவது சட்டத்தை அமுல்படுத்தி இனபிரச்சினைக்கு தீர்வுகான வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஜனாதிபதி இதனை நடைமுறைப்படுத்த நடிவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கான அனைத்துவிதமான ஒத்துழைப்புகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இலங்கையில் இனங்களுக்கு இடையிலேயான முரண்பாடுகள் மற்றும் ஒற்றமை இன்மை காரணமாகவே 30 வருட கொடூர யுத்தம் நடைபெற்றது. இதனால் பல பின்னடைவுகளை நாடு சந்தித்தது.

அதனால் தற்போது நாடு அபிவிருத்தியில் பின்னடைவை நோக்கி உள்ள நிலையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யபட்டு உள்ளார். இவர் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும்.

இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமான ஒன்றாகும். அதுவே தற்போது நடைபெற்று வருகின்றது. இலங்கையில் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு தற்போது அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மலையக மக்கள் நிம்மதியாகவே வாழ்ந்து வருகின்றனர். பெருபான்மை இன மக்களின் கெடுபிடிகள் இல்லை. அவர்களும் நாட்டின் நிலமையை புரிந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இலங்கையின் ஜனாதிபதி இந்தியா சென்றிருந்த வேலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்த செயற்பாடு இங்குள்ள பெருபான்மை சிங்கள மக்களை ஆத்திரம் அடைய செய்யும் செயற்பாடாகும்.

இவர்கள் கொந்தளித்தால் மீண்டும் வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் நிம்தியாகவே வாழ முடியாது. அங்கு ஆர்பாட்டங்ளை செய்து விட்டு நீங்கள் வீட்டுக்கு போய் நிம்மதியாக இருந்து விடுவீர்கள்; இங்கு அடி வாங்குவது நாங்களே.

அதனால் இந்தியாவில் வாழும் எங்களது தொப்புள் கொடி உறவுகளே உங்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பு அளிக்கின்றோம். உங்களது செயற்பாடுகள் அனைத்தும் எங்களது நிம்மதியான வாழ்க்கைக்காக இருக்க வேண்டும்.

நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டுமானால் உங்களது அழுத்தங்கள் இங்குள்ள மக்களின் அபிவிருத்திகள் மற்றும் 13ஆவது சட்டம் அழுல்படுத்துதல் தொடர்பாக இருக்க வேண்டும்.

13ஆவது சட்டம் என்பது இலங்கையில் உள்ள இன பிரச்சினைக்கான தீர்வு சட்டமாகும். அதனை அமுல்படுத்தினாலே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும். இதனையே இந்திய பிரதமர் மோடி நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *