
ஜனநாயகம் காக்கும் தொடர்ச்சியான போரில் தி.மு.க.எப்போதும் இந்தியாவுக்கு வழிகாட்டுமென மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார். அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “வியூகங்களை முறியடித்து, மாநில நலன் காக்கும் வகையில் கூட்டணியை உருவாக்கி, புதிய ஆட்சி அமைவதற்கு சூத்திரதாரியாகச் செயற்பட்டவரான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன்.
இதன்போது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று அங்கு சென்றபோது சிறந்த வரவேற்பு எனக்கு கிடைத்தது.
முதல்வராக பொறுப்பேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்த போது, அவரும் என் மீது தனிப்பட்ட அன்பு செலுத்தினார். அப்போது, மராட்டிய மாநிலத்தில் வாழும் 10 இலட்சம் தமிழர்களின் நலன் காக்கும் வகையில் செயற்பட அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
சமத்துவத்தை நிலைநாட்டும் சமூக நீதிதான் தி.மு.க.வின் கொள்கை. அதேநேரத்தில், ஜனநாயகத்தின் கழுத்தில் கொடுவாள் பாய்ச்சப்படும்போதும் குதிரை பேரத்தால் ஜனநாயகத்திற்குப் புதைகுழி தோண்டப்படும்போதும் மாநில உரிமைகளைப் பாதுகாத்து ஜனநாயகத்தை மீட்டெடுத்திட தார்மீக ஆதரவை வழங்குவது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு.
அந்தவகையில் ஜனநாயகம் காக்கும் தொடர்ச்சியான போரில் தி.மு.க.எப்போதும் இந்தியாவுக்கு வழிகாட்டும்” என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply