
தேர்தலை கண்டு அ.தி.மு.க. என்றுமே அஞ்சுவது இல்லையென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜெயக்குமார் மேலும் கூறியுள்ளதாவது, “வட.சென்னையின் நுழைவு வாயிலாக இருப்பது எண்ணூர் விரைவு சாலை. சென்னை துறைமுகத்தில் இருந்து செல்லும் 90 சதவீத வாகனங்கள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றன.
அத்துடன் இன்னும் 5 ஆண்டுகளில் வட.சென்னையின் தோற்றத்தை தென்.சென்னைபோல மாற்றுவதற்கு 16 ஆயிரம் ரூபாய் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தில் தமிழக மக்கள் அதிகளவில் கோபமாக இருப்பது மு.க.ஸ்டாலின் மீதுதான். 2016இல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டார். தற்போது 2019ஆம் ஆண்டிலும் முட்டுக்கட்டை போடுகிறார்.
கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தற்போது தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல இடங்களில் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டாம் என்று கூறிய தி.மு.க.வினர், தற்போது நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டும் என்கின்றனர். தி.மு.க.வினர் குழப்பத்திலேயே உள்ளனர். ஆனால் தேர்தலை கண்டு அ.தி.மு.க. என்றுமே அஞ்சுவது இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply