
தமிழினத்தின் அடிப்படை அரசியல் உரிமைகளை, ஜனநாயக வேட்கையை நிலைநிறுத்த புதியதொரு அரசியல் இயக்கத்தை இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்கிறோமென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிறிகாந்தா மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.தே.க.வின் கிளையாக தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை மழுங்கடித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசுக்கட்சியை எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்ப தயாராக இருக்கிறோம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதென நாம் முடிவெடுத்திருந்தோம். கட்சியின் முடிவை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட என் மீதும், கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர், துணை செயலாளர் ஆகியோருக்கு ஒழுங்கு நடவடிக்கை கடிதம் கட்சியால் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கட்சியால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலிற்கு இரு வாரங்களின் முன்னர் அவசர அவசரமாக மத்தியகுழு கூட்டத்தை கூட்டி, ஐ.தே.க.வை ஆதரிப்பதென முடிவெடுத்தார்கள். நான்கு நாட்களின் பின் ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்திலும், எம் போன்றவர்களின் எதிர்ப்பை மீறி சஜித்தை ஆதரிபபதென முடிவானது.
கோட்டாபயவையோ சஜித்தையோ ஆதரிக்க முடியாதென தலைமைக்குழு கூட்டத்தில் விளக்கமளித்திருந்தேன்.
தமிழர்களின் சார்பில் ஐந்து கட்சிகள் கையொப்பமிட்ட 13 அம்ச கோரிக்கைகளை தொட்டுகூட பார்க்க தயாராக இல்லாத நிலையில், அவர்களிற்கு ஆதரவளிக்க முடியாதென குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால், தமிழ் அரசு கட்சியை பின்பற்றி சஜித்தை ஆதரிப்பதென ரெலோ தீர்மானித்தது. அதை ரெலோவின் யாழ்.மாவட்ட குழு ஆராய்ந்த பின் புறக்கணித்து. எனவேதான் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதென முடிவெடுத்தோம்.
தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை முன்னிறுத்தி சுயேட்சையாக அவர் போட்டியிட்டிருந்தார். அவரை ஆதரித்தமைக்காக என் மீதும் இப்பொழுது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக சிறியளவேனும் நாம் கவலைப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply