
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், திகார் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அவரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்தது.
இதில் சி.பி.ஐ.வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அமலாக்கத்துறை வழக்கிலும் கைதானார்.
ப.சிதம்பரம் பிணை மனு இதுவரை 5 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இறுதியாக சி.பி.ஐ. வழக்கில் அவருக்கு பிணை கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கு காரணமாக அவர் தொடர்ந்து சிறையிலேயே உள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் அவரது பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ளது. இடையில் சில நாட்கள் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.
இந்நிலையிலேயே அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளதாவது, “ப.சிதம்பரம் 100 நாட்களுக்கு மேலாக நீதிமன்ற காவலில் உள்ளார்.
அவரை தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளமையானது, தங்களுக்கு எதிரானவர்களுக்கு தொல்லை கொடுக்கும் மிகமோசமான செயலே தவிர வேறொன்றுமில்லை. ஒரு தனிநபரின் தனிப்பட்ட சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டியது நீதிமன்றத்தின் கடமை” என்றார்.
கட்சி தலைவர்கள், மகளிர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அமைப்புகளும் ப.சிதம்பரத்தை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.
மகளிர் காங்கிரஸ் டுவிட்டரில், ‘ப.சிதம்பரத்தை விடுதலை செய்’ என்ற தலைப்பில் கருத்துகளை தெரிவித்துவருகிறது.
மேலும் மகளிர் காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ், “ஆளுங்கட்சி புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்கி வருகிறது. இப்படி அவர்கள் மீது வழக்குகளை போடுவதுதான் புதிய இந்தியா” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி டுவிட்டர் வலைத்தளத்தில், “சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் வாதங்களில் பல வெளிப்படையான தவறுகள் இருப்பது தெரிகிறது. அவைகள் தங்களது அரசியல் ஆசான்கள் உத்தரவின் பேரில் இந்த வெறுக்கத்தக்க வேலையை செய்துள்ளன” என்று கூறியுள்ளது.
Leave a Reply