
ஈஸ்டர் தாக்குதலுக்கான காரணத்தை சரியாக இணங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
இதன்போது, விசாரணை ஆணைக்குழுவின் செயற்பணிகள் மற்றும் ஒழுங்கமைப்பினை ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜானக்க டி சில்வா தெளிவுப்படுத்தியுள்ளார்.
அத்துடன் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
தாக்குதல் நடத்தப்படுமென முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனத்திற்கொள்ளவில்லை என்றும் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதனை மறைப்பதற்காக சில அதிகாரிகள் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளதாக சந்தேகம் ஏற்படுவதாகவும் நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்குதலுக்கான காரணத்தை சரியாக இணங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தியுள்ளார்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அபிலாஷையும் அதுவாகுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்புத் தொடர்பாக பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால் புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் பெறுபேறாக இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய முடியாதுள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் தொடர்பான சகல தகவல்களையும் கண்டறிவதுடன், இத்தகைய தாக்குதல்கள் மீண்டுமொருமுறை இடம்பெறாதிருப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்ய வேண்டியதன் தேவையை வலியுறுத்தியதுடன், பாதுகாப்பு பொறிமுறை வீழ்ச்சியடைவதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டியதும் அவசியமாகுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் ஆணைக்குழுவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply