
17 பேர் உயிர்பலியாக காரணமாக இருந்த, தீண்டாமை சுற்றுச்சுவரை கட்டிய உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து, அப்பகுதியில் இருந்த வீடுகளின் மீது சரிந்துள்ளது.
இதில் நள்ளிரவில் உறங்கி கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேர மீட்பு பணிக்கு பின்னரே இடர்பாடுகளில் சிக்கியிருந்த 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
ஆனால் அந்த உடல்களை பெற மறுத்து உறவினர்களும் பொதுமக்களும், தீண்டாமை சுற்றுச்சுவரை கட்டிய உரிமையாளரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேதமடைந்து விழும் நிலையில் இருந்தபோதும் கூட, சுவர் அகற்றப்படாமல் இருந்ததே உயிர்பலிக்கு காரணம் என அவர்கள் கூறினர்.
ஆனால் அதனை காதில்வாங்காத பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டியதோடு, சிலரை கைது செய்தனர்.
சுவர் எழுப்பியவரை விடுத்து மாறாக போராட்டத்தில் ஈடுபட்டவரை கைது செய்த பொலிஸாருக்கு எதிராக அரசியல்வாதிகளும், சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதன் உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் வீடு இடிந்த விபத்தில் தந்தையை இழந்த சிறுமி ஒருவர், தமக்கு புத்தகங்கள் இல்லை என்றும், படிப்பை தொடர உதவி செய்தால் தாயை காப்பாற்றிவிடுவேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

Leave a Reply