கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் – ஜஸ்மின் சூக்கா

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த 11 பேர் தங்கள் வழக்குகளை தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவருக்கு எதிராக மீள வழக்குத் தாக்கல் செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ள உரிமையை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறித்த சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர், ஒரு நாள் கோட்டாபயவுடன் அவருக்கு உதவியவர்களும் பொறுப்புக்கூறும் நிலையேற்படும் என  ஜஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாமதம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக நீண்டநாள் காத்திருக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்குத் தாக்கல் செய்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு எதிராக பழிவாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றால் இந்த குற்றங்களுக்கு யார் காரணம் என்பது தெளிவாகிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் ஹவுஸ்பீல்ட் எல்.எல்.பி. என்ற அமைப்புடன் இணைந்து வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இதன்படி, ஏப்ரல் 2019 இல் கலிபோர்னியா நீதிமன்றில் ரோய் சமாதானம் என்பவர் வழக்கு தாக்கல் செய்த நிலையில் இதன் பின்னர் யூன் மாதத்தில் இரண்டு சிங்களவர்கள் உட்பட பத்துப்பேர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க நீதிமன்றில் நீதிவழங்கும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *