
கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் தேடுதல்கள், விசாரணைகள், அச்சுறுத்தல்களை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்ற இலங்கை பத்திரிகையாளர்களின் கரிசனைகளை பகிர்ந்து கொள்வதாக எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பின் ஆசியா பசுபிக்கிற்கான தலைவர் டானியல் பாஸ்டார்ட்தெரிவித்துள்ளார்.
“டேர்மினேட்டர் என அழைக்கப்படும் ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வார காலத்திற்குள் இலங்கையின் பத்திரிகை சுதந்திரத்தின் மீது அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்துவிட்டது.
ஆரம்ப இலக்குகளாக நியுஸ்ஹப் எனப்படும் செய்தி இணையத்தளம் காணப்பட்டது, அதன் அலுவலகத்தை நவம்பர் 26 ம் திகதி சோதனையிட்ட காவல்துறையினர் சேர்வர்கள், கணிணிகள், மடிக்கணிணிகள் ஆகியவற்றில் உள்ளடக்கங்களை ஆராய்ந்தனர்.
நியுஸ் ஹப்பின் அலுவலகத்தை சோதனையிடுவதற்கான தாங்கள் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்து காவல்துறையினர் காண்பித்த ஆவணத்தில் 12 டிசம்பர் 2018 என்ற திகதி காணப்பட்டது, அந்த ஆவணம் ஒரு வருடத்திற்கு முன்னர் காலாவதியாகி விட்டது .
எனினும் இந்த குற்றச்சாட்டினை அலட்சியம் செய்த காவல்துறையினர் இணையத்தளத்தின் அனைத்து கணிணிகளிலும் கோத்தா என் வார்த்தை உள்ளதா என சோதனை செய்தனர்,கோத்தாபய என ஏதாவது குறிப்பு காணப்படுகின்றதா என கண்டுபிடிப்பதற்காக அவ்வாறு செய்தனர்.
சுயாதீன செய்தி ஊடகத்தின் மீதான காவல்துறையினரின் முழுமையான சோதனையும்,குற்றவியல் நடைமுறைகள் மோசமாக மீறப்பட்டமையும் கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் ஊடக சுதந்திரம் குறித்து கவலை தரும் சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளன.
பத்திரிகையாளர்களை அச்சுறுத்தாமல் அவர்களின் பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு அரசாங்கம் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்களை விடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தமிழ் நாளிதழான தினப்புயலின் ஆசிரியர் சக்திவேல் பிரகாஸ் வவுனியாவில் சீருடைய அணியாத காவல்துறையினரால் பல மணி நேரம் விசாரி;க்கப்பட்டார். விடுதலைப் புலிகள் குறித்து வெளியான கட்டுரைகள் படங்கள் குறித்து அவரிடம் பல மணிநேரம் விசாரணை செய்த பின்னர் அவரின் நிருபர்கள் அனைவரினதும் விபரங்களை கோரினார்கள். அவர் அதனை வழங்க மறுத்துவிட்டார்.
லீடர் என்ற செய்தி இணையத்தளத்தின் யூடியுப்பிற்கு பொறுப்பாகவுள்ள சஞ்சய் தனுஸ்க என்பவர் 26 ம் திகதி சிஐடியினரால் விசாரணை செய்யப்பட்டார்.
வொய்ஸ் டியுப் என்ற செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் துசார விதாரன 28 ம் திகதி சிஐடியினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்,கடந்த காலத்தில் லீடர் என்ற இணையத்தளத்தில் பணியாற்றிய வேளை தனது நடவடிக்கைகள் குறித்து இரண்டு மணிநேரம் விசாரணை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். அவர் அந்த இணையத்தளத்தில் தற்போது பணிபுரியவில்லை என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது
Leave a Reply